கஜேந்திரனை காப்பாற்றிய பெருமாள்

கஜேந்திரன் என்ற மிகவும் வலிமை பொருந்திய யானை ஒன்று, ஒரு காட்டில் தன் யானை கூட்டங்களுடன் வசித்து வந்தது.

யானை கூட்டத்துக்கே தலைவன் ஆன அந்த யானை மிகவும் சந்தோசமாக, தன் புஜ பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தது.

ஒரு நாள், தன் கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளுடன் களியாட்டம் போட்டு கொண்டே ரம்மியமான ஒரு குளத்தின் அருகே வந்தது.

அந்தி சாயும் நேரம். மலை அடிவாரத்தில் அமைந்து இருந்த அந்த குளத்தை சுற்றியும் இருந்த பூத்து குழுங்கிய சோலைகள் கஜேந்திரனின் மனதை பறித்தன.

அருகில் இருந்த அழகான பெண் யானைகளுடன் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்த படி விளையாடி மகிழ்ந்தது.

அப்போது, அந்த குளத்தில் பூத்து இருந்த அழகான தாமரை பூ கஜேந்திரனின் கண்ணில் பட்டது. அதை பறித்து கொண்டு வந்து விட்டால், மற்ற பெண் யானைகள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்தது. உடனே குளத்தில் காலை வைத்து, இறங்க ஆரம்பித்தது.

காத்து கொண்டு இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலை பிடித்து விட்டது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல, கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள் யானையின் காலை விடாமல் பிடித்துக்கொண்டே இருந்தது. தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றக் கூடியவர்கள் என எண்ணி கொண்டு யானை கூப்பிட்டது தன்னுடைய உறவினர்களையும் நண்பர்களையும் தான்.

ஆனால், யாராலும் தன்னை காப்பாற்ற முடியாது… தன்னை காப்பாற்ற கூடியவன் அந்த எம்பெருமான் ஒருவன் மட்டுமே என்பதை இறுதியாக, உறுதியாக நம்பிக் கடைசியாக இறைவனை “ஆதி மூலமே” என்று தான் கூப்பிட்டது.

ஆதி மூலம் என்கிற நாமத்தால் இறைவனை கஜேந்திரன் கூப்பிட்டதால், “ஆதி மூலமே” என்கிற நாமத்தை கேட்கும் போதெல்லாம் இந்த கஜேந்திரனின் சரித்திரம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. நமக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் “ஆதி மூலமே, அனாத ரக்‌ஷகா” என்று உள்ளம் உருக நாம் எம்பெருமானை நோக்கி அழைத்தால் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து அவன் நம்மை காப்பான்.