பாக்குமட்டைத் தட்டுகள் - Pakkumattai Plates


இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல், அதை தூக்கி எறிந்து விட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும். அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும். அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.


பாக்குமரத்தில் பாக்குகாய் காய்க்கிறது. இப்பாக்குகாய் அறுவடை சீசன் முடிந்த பிறகு, பாக்குமரத்தில் குலை தாங்கி இருந்த, பாக்கு மட்டைகள் உதிர்ந்து விழும். இப்படி உதிர்ந்து விழும் பாக்கு மட்டைகளை சேகரித்து, வெயிலில் உலரவைத்து பதப்படுத்தி, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு, அது இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. இயந்திரம் மின்சார உதவியுடன் வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறது. வட்டம், சதுரம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில் தட்டு வடிவமைக்கப்படுகிறது. இத்தட்டிற்கு ஆங்கிலத்தில் "Areca Plate" என்று பெயர்.

இன்று பாக்கு மட்டைத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. திருமண விசேஷங்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை இன்று பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு.

பிளாஸ்டிக் தட்டுகளின் ஆபத்துகளிலிருந்து பூமியைக் காப்பாற்றும் முயற்சிகளில், பாக்கு மட்டைப் தட்டுகள் உபயோகத்துக்குப் பெரிய பங்குண்டு.

பாக்குமட்டை தட்டு எவ்வாறு சிறப்பானது ? 
பாக்குமரங்களில் இருந்து இயற்கையாக விழும் மட்டைகளைச் சேகரித்து, அழுக்கு, தூசி நீங்க சுத்தப்படுத்திய பிறகே தட்டுகள் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. சுத்தப்படுத்துவதிலோ, தயாரிப்பிலோ எந்த ரசாயனக் கலவையும் சேர்க்கப்படுவதில்லை என்பதால், 100 % இயற்கையானது.

எக்காரணம் கொண்டும், மட்டைகள் பாக்கு மரங்களில் இருந்து வெட்டப்படுவதில்லை. தானாக விழுகிற மட்டைகளைத்தான் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், பாக்கு மரங்களின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுவதில்லை.

கீழே விழுந்த மட்டையானது, அடிப்பகுதியில் பச்சையாகவும், மேல் பகுதியில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். வெயிலில் காய வைத்த பிறகு, மறுபடி நிறம் மாறும். அப்படி உலர்ந்த மட்டையை மறுபடி தண்ணீரில் நனைப்பார்கள். அப்போது அது விரியும். அது பாதி காய்ந்ததும், மெஷினில் செலுத்தப்படும். மட்டைக்கு மட்டை நிறம் லேசாக வேறுபடலாம். அது அதன் இயற்கையான நிறம் என்பதால், அந்த நிற வேறுபாட்டைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

அதிகக் குளிர்ச்சி, அதீத சூடு என இரண்டையும் தாங்கக் கூடியது பாக்கு மட்டைப் பொருள்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாலோ, சுடச்சுடப் பொருள்களை வைப்பதாலோ, பாக்குமரத் தட்டு எந்த எதிர்வினையையும் ஏற்படுத்துவதில்லை.

தயாரிக்க மூலப்பொருள்கள் என்ன தேவை ?

1. பாக்கு மட்டை
2. தண்ணீர்
3. மேனுவல் மெஷின் (Manual) அல்லது ஹைட்ராலிக் மெஷின் (Hydralic) 

பாக்கு மட்டையை எங்கே வாங்கலாம்?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அந்தமான் போன்ற இடங்களில் பாக்குமட்டை கிடைக்கிறது. தமிழகத்தில் கிடைப்பது நீளம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் இருக்கும். கர்நாடகாவில் நீளம் அதிகம், அகலம் குறைவு. கேரளத்தில் எல்லாம் கலந்து கிடைக்கும். அந்தமானில் ஆளுயர அளவுகளில் கிடைக்கும். ஏற்றுமதித் தரத்துக்கு ஏற்றது. தோப்புகளில் சொல்லி வைத்து வாங்கலாம். ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்துக்கு 5, 6 மட்டைகள்தான் விழும். ஈர நைப்புடன் இருக்கும் அவற்றை, விவசாயிகள் எடுத்துக் கழுவிக் காய வைத்து, குடோனில் பாதுகாத்து, பிறகே நமக்கு சப்ளை செய்வார்கள்.

பாக்குமரம்

பாக்குமட்டை 

முதலீடு என்ன தேவை ? 
ஒரு மட்டையின் விலை ரூ.2.50. ஒரு மட்டையில் குறைந்தது 3 தட்டுகள் செய்யலாம். மேனுவல் மெஷினின் விலை ஒன்றே கால் லட்சம். ஹைட்ராலிக் மெஷின் மூன்றரை லட்சம் ரூபாய்.

இடவசதி எப்படி ?
மேனுவல் மெஷின் வைக்க 100 சதுரஅடி (10 அடிக்கு 10 அடி இடம்), ஹைட்ராலிக் மெஷின் வைக்க 150 சதுரஅடி (10அடிக்கு 15அடி) அளவுள்ள இடமும் போதும். மற்றபடி மட்டை உள்ளிட்ட மூலப்பொருள்களை மொட்டை மாடி, கார் ஷெட், தோட்டம் போன்ற இடங்களில் போட்டு வைக்கலாம். தண்ணீர் டேங்க் ஒன்று தேவை.


பாக்குமட்டைத் தட்டு தயாரிக்கும் இயந்திரம்

என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம் ?
12, 10, 8, 6, 4 இன்ச் என ஐந்து அளவுகளில் தட்டுகள் தயாரிக்கலாம். வட்டம், சதுரம், அறுகோணம் என எந்த வடிவத்திலும் தட்டுகள் செய்யலாம். தவிர சூப் பவுல்கள், ஸ்பூன்கள், செருப்புகள், விசிறி, தொப்பி என நிறைய பொருள்கள் தயாரிக்கலாம்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும் ?
மேனுவல் மெஷினில் ஒரு ஷிஃப்டில், அதாவது 7 மணி நேரத்தில் 1000 தட்டுகள் தயாரிக்கலாம். ஹைட்ராலிக் என்றால் 2000 தட்டுகள் தயாரிக்கலாம். அவரவர் வசதி, நேரத்தைப் பொறுத்து, 3 ஷிஃப்டுகள் வரை உழைக்கலாம். அதற்கேற்ப உற்பத்தியும் மாறும். 12 இன்ச் தட்டு ரூ.2.80, 10 இன்ச் ரூ.1.90, 8 இன்ச் ரூ.1, 6 இன்ச் 75 பைசா, 4 இன்ச் 30 பைசா, பவுல் மற்றும் சூப் செட் ஒன்று ரூ.6.50. இது நமக்கான உற்பத்தி விலை. இவற்றை முறையே 3.50, 2.50, 1.50, 1, 50 பைசா மற்றும் 7 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கலாம்.

தட்டுகளை எங்கு விற்பது ?
தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் ஆர்டர் பிடிக்கலாம். சுற்றுலா மையங்களில் உள்ள கடைகளில் விற்பனையாகும். வட இந்தியாவில் இவற்றுக்கான மவுசு அதிகம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், நீண்ட கால பலன் தரும் பாக்கு மரங்களை, விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். வசிஷ்டநதி, வெள்ளாற்றின் கரையோர கிராமங்களில், 6,000 ஹெக்டேரில், பாக்கு மர தோப்புகள் உள்ளன. இதேபோல், கரியகோவில் அணை, ஆணைமடுவு அணையில் இருந்து பாசன வசதி பெறும், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு மேல், மகசூல் தரும் பணப்பயிரான பாக்கு மரங்களை, 4,000 ஹெக்டேர் அளவிற்கு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், பழனியாபுரம், கொட்டவாடி, குறிச்சி, வைத்தியகவுண்டன்புதூர், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், நரசிங்கபுரம் ஆகிய பகுதியில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர், பாக்கு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

சேலத்தில் உள்ள சில நிறுவனங்கள் இத்தொழில் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் உங்களுக்கு மூலப்பொருள்களையும் கொடுத்து, நீங்கள் தயாரித்த தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று, பாக்கு மட்டை தட்டுகளை சந்தைப்படுத்தி விடலாம். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

தற்போது தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

குளிர்காலத்தில் பாக்கு மட்டை தட்டுகளில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. எனவே தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை. நிறையத் தயாரித்து நீண்ட காலம் இவற்றை பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் இதில் உள்ளன

உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்குமரப் மட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை

ஏற்கனவே பிளாஸ்டிக் தட்டுகள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுபுற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது.

உங்கள் மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தால், அதன்மூலம் சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெறலாம். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றால், 35% மானியம் கிடைக்கும்.

இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். இது மன நிறைவைத் தரும்.


Tamil Free E-Books Download

பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html 

பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை  நாங்கள் யூடியூப்-பில் (YouTube)  வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/youtube.html

பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html

சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://aanmeegamindia.blogspot.com/p/all.html